Sunday, April 10, 2011

செல்வராஜ் மாஸ்டர் - I

நவம்பர் 2002.
கோயமுத்தூரில் பொறியியல் படிக்க நான் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகி இருந்தன. சொந்த ஊரான சென்னையில் அண்ணா யுனிவேர்சிட்டி-யில் இடம் கிடைத்தும் பி.எஸ்.ஜி தான் செல்வேன் என்று அடம் பிடித்து வந்திருந்த காலம். பலருக்கும் அந்த முடிவின் காரணம் புரியவில்லை. உண்மையை சொல்வதென்றால், எனக்கும் ரொம்ப புரியவில்லை. It was probably not a very logical decision. Though one I have never regretted.
"பி.எஸ்.ஜி. தான் உனக்கு ரைட்" என்ற என்னுடைய வகுப்பாசிரியரின் advice, தாத்தா-பாட்டி இருக்கும் பொள்ளாச்சி-க்கு பக்கத்தில் இருக்கிறது என்ற கூடுதல் ஜாலி - இது போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தாலும், இன்னொரு சிறு காரணி: அது வரையில் என் வாழ்வின் மிக்க மகிழ்ச்சியான நாட்களை நான் கோவையில் தான் கழித்திருந்தேன். 
From 2nd standard to 4th standard. என்னுடைய ஆட்டோகிராப் தினங்கள் (without the slew of heroines).
****
அப்பொழுது நான் சாய்பாபா காலனி-யில் அங்கப்பா-வில் படித்து கொண்டிருந்தேன்.
நாலாம் வகுப்பில் இருந்தபோது, பள்ளியில் extra-curricular activities என்ற பெயரில் சில class-களை அறிவித்தார்கள். வீட்டில் அப்பாவிடம் சொன்னேன்.
"நல்ல விஷயம். என்னென்ன class நடத்த போறாங்க?" என்றார்.
ஒப்பித்தேன்.
"ம்யுசிகல் இன்ஸ்ட்ருமென்ட் ஒண்ணு கத்துகிறது நல்லது தான். பெர்கஷின் லாம் சேந்தா மத்த இன்ஸ்ட்ருமென்ட்-ஓட தயவு தேவைப் படும். ஹார்மோனியம்-னா, வேற யாரும் இல்லைனா கூட நீயே கச்சேரி நடத்திரலாம். ஹார்மோனியம் சேந்துக்குரியா?" என்றார்.
"ஒண்ணும் புரியல OK!" என்றேன், அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில்.
மறு நாள் class துவங்கியது. எல்லா மியூசிக் ஸ்டூடென்ட்ஸும் ஒரே இடத்தில் குழுமி இருந்தோம். 
மிருதங்கம். ட்ரம்ஸ். கிடார். கீபோட். ஹார்மோனியம். டபிள் பாங்கோஸ். எல்லாம் அடுக்கப் பட்டிருந்தன.
சிறிது நேரத்தில் பஸ் டிரைவர் செல்வராஜ் அண்ணா வந்தார்.
'அட. இன்னிக்கு நம்ம ஸ்கூல் பஸ்-ல போக போறதில்ல-னு தெரியாம நம்மள தேடிட்டு வந்துருக்காரோ?' என்று நான் நினைத்த நேரத்தில், "எல்லாரும் வந்தாச்சா? நான் தான் உங்களுக்கெல்லாம் மியூசிக் கிளாஸ் எடுக்க போறேன்!" என்றார், என் அதிக பிரசங்க எண்ணத்தை அடியோடு அழித்தவாறு.
பஸ் டிரைவர் செல்வராஜ் அண்ணா. 
ஒல்லியான உருவம். neat-ஆக சீவிய முடி. பிரபுதேவா தாடி. முகத்தில் ஒரு அமைதி. புன்சிரிப்பு.
"யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ருமென்ட்-க்கு பேர் குடுத்துருக்கீங்க?"
"கீபோட்", "கிடார்" என்று எல்லாரும் modern-ஆக சொல்லிக்கொண்டிருக்க, அமைதியாக "ஹார்மோனியம்" என்றேன், வேறு யாருக்கும் கேட்டுவிடக் கூடாதே என்ற பயத்தில். அந்த நேரம் பார்த்து குரங்கு சேஷ்டை கணேஷ் டபிள் பாங்கோஸ்-ஐ வெளுத்து கட்டி கொண்டிருந்ததால், நான் சொன்னது மாஸ்டர் தவிர யாருக்கும் கேக்கவில்லை. சில நொடிகளுக்கு கணேஷ் என் மானசீக best-friend ஆனான்.
எல்லோரும் instrument-choice சொன்னவுடன், குரூப்- குரூப்பாக பிரிக்கப்பட்டோம்.  தேசிகனும் நானும் மட்டும் தான் ஹார்மோனியம். partners in self pity என்று ஒன்றாக உட்கார்ந்து கொண்டோம்.
சிறிது நேரத்தில் செல்வராஜ் அண்ணா.. அல்ல.. செல்வராஜ் மாஸ்டர் எங்களிடம் வந்தார்.
"என்ன.. ரெண்டு பேரும் ஹார்மோனியம்-ஆ? கொஞ்ச நாளைக்கு கீபோட் குரூப்-ஓட உக்காந்துகோங்க. ஹார்மோனியத்துல ரெண்டு கட்டை சரி இல்ல" என்று எங்களை சுய பச்சாதாபத்தில் இருந்து விடுவித்தார். இருந்தாலும் அப்பா-விடம் சொல்ல வேண்டுமே என்ற பயத்தில் "இல்ல மாஸ்டர்.. அப்பா ஹார்மோனியம் தான் கத்துக்க சொன்னார்" என்றேன்.
"ஹா ஹா.. ரெண்டுமே ஒண்ணு தான்! ஒண்ணும் வித்தியாசம் இல்ல. அப்பா-கிட்ட நான் சொல்லிக்குறேன்" என்றார்.
அட்ரா சக்க. அட்ரா சக்க.
ஆர்வத்துடன் கீபோட் பக்கம் சென்றோம்.
பளபளவென்று இருந்தது.
Casio SA-10.
இன்று அது சின்னதாகத்  தெரிந்தாலும், அன்று இம்மாம்பெரிசாகவே  தென்பட்டது. பயபக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு மாஸ்டரை நோக்கினோம். கரும்பலகை ஒன்றை வைத்து, அவருடைய trademark புன்னகையுடன் C, D, E, F, Staff, Stave, G-Clef, என்றெல்லாம் தியரி நடத்தினார். பின் முதல் பாடலாக 'ரகுபதி ராகவ ராஜாராம்' சொல்லிக் கொடுத்தார். (இன்று வரை, நான் கண்ணை மூடிக் கொண்டும் வாசிக்கக் கூடிய ஒரே பாடல் அதுவே). ஒரு மணி நேரம் நாங்கள் மாற்றி மாற்றி கர்மசிருத்தையுடன் ரகுபதி ராகவா ராஜாராமினோம். அதன் பின் வந்த மாஸ்டர் "Ok, இன்னிக்கு இது போதும். Tune கரெக்டா வாசிக்கிரீங்களோ இல்லையோ, fingering ரொம்ப முக்கியம். கொஞ்ச நாளைக்கு இதையே practice பண்ணுவோம். இப்போ எல்லாரும் வீட்டுக்கு போங்க. நாளைக்கு பாப்போம்!" என்று அனுப்பி வைத்தார். 
தங்க ராஜ பஸ் ஏறி 80 பைசாவுக்கு டிக்கெட் வாங்கி, ஷண்முகா தியேட்டரில் இறங்கி, மீதிச் சில்லறை 20 பைசாவுக்கு 2 பிஸ்கட் வாங்கி தின்றுகொண்டே வீட்டிற்குச் செல்லும் வரையில் அந்த கீபோட் ஒலி என் காதில் ரீங்காரித்துகொண்டே இருந்தது. மாடிப் படிக்கட்டுகள் என் கண்ணிற்கு அடுக்கி வைத்த கீபோட் கட்டைகளாக தெரிந்தன.
அப்பா வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை சொன்னேன்.
"அப்படியா. அப்போ சரி கீபோடே கத்துக்கோ. ஆனா என் கிட்ட வந்து வாங்கி குடு-னு கேக்காதே" என்று எனக்கு பெர்மிஷனும் குடுத்து, அவர் பாக்கேட்டிற்கும் safety பண்ணிக்கொண்டார். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் ஆனேன். மறு நாள் மியூசிக் கிளாஸ் துவங்கும் வரையில் அதே ஞாபகம். ஒரே ஞாபகம்.
****
அன்பான ரீடர் பொது மக்களே..
இன்னும் சொல்ல வந்த விஷயத்தையே ஆரம்பிக்கல!
'ஸ்ரீரங்கத்து தேவதைகள்'-ஐ ரிவைஸ் செய்ததன் வெளிப்பாடாக வந்த இந்த பதிவின் introduction-ஏ இழுத்துகிச்சு. படிக்க நீங்க இருக்கீங்க-ங்கற தைரியத்துல பெப்பரபேய்ங்-னு எழுதிகிட்டே போயிட்டேன்.
அடுத்த பகுதியில சுருக்கமா விஷயத்த சொல்லிடுரேனே, ப்ளீஸ்!!